search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆவுடையார் கோவில்"

    பரக்கலக்கோட்டையில் உள்ள பொது ஆவுடையார் கோவிலில் கார்த்திகை கடைசி சோமவார விழா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ளது பரக்கலக்கோட்டை கிராமம். இங்கு உள்ள பொதுஆவுடையார் கோவில், பிரசித்திபெற்ற சிவன் கோவில்களில் ஒன்றாகும்.

    இந்த கோவிலில் சிவபெருமான், ஆலமரமாக காட்சி தருகிறார். இந்த கோவில் இறைவனுக்கு மத்தியபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. மற்ற கோவில்களை போல இக்கோவிலின் நடை அனைத்து நாட்களிலும் திறக்கப்படுவது இல்லை.

    ஒவ்வொரு திங்கட்கிழமைதோறும் நள்ளிரவு மட்டுமே நடை திறக்கப்படுகிறது. ஆண்டுதோறும் தை மாதம் 1-ந் தேதி பொங்கல் பண்டிகை நாளில் மட்டுமே இக்கோவிலின் நடை பகலில் திறந்து இருப்பதை காண முடியும்.

    மற்ற நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலின் கதவு முன்பாக வழிபாடு செய்கிறார்கள். ஆடு, கோழி, தேங்காய், நெல் உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் இந்த கோவிலுக்கு காணிக்கையாக வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.


    பொது ஆவுடையார் கோவிலுக்கு பக்தர்கள் வழங்கிய தேங்காய்கள் குவித்து வைக்கப்பட்டிருந்த காட்சி.

    ஆல மரத்தையே ஆலயமாக போற்றி வணங்கப்படும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சோமவார விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கார்த்திகை சோமவார விழா கடந்த மாதம்(நவம்பர்) 19-ந் தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு திங்கட்கிழமையும் நள்ளிரவில் நடை திறக்கப்பட்டு பொது ஆவுடையாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கடைசி சோமவார விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து தங்களது வயலில் சாகுபடி செய்யப்பட்ட நெல், உளுந்து மற்றும் தேங்காய், ஆடு, கோழி மற்றும் தானியங்களை காணிக்கையாக வழங்கி தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நெல், மலை போல குவித்து வைக்கப்பட்டிருந்ததை படத்தில் காணலாம்.

    பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நெல் கோவில் வளாகத்தில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்தது. அதேபோல தேங்காய்களும் அதிகளவு குவிந்தன.

    விழாவையொட்டி பொது ஆவுடையார் கோவிலுக்கு வேதாரண்யம், மன்னார்குடி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, பேராவூரணி உள்பட பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சம்பத்குமார், பரம்பரை அறங்காவலர்கள் சடகோபராமானுஜம், ராமானுஜம் மற்றும் பரக்கலக்கோட்டை கிராம மக்கள் செய்து இருந்தனர். 
    ×